# பவர் சென்டர் பாலிட்டிக்ஸ்! **By:** ந.பொன்குமரகுருபரன் **Published:** 2026-06-03T00:27:58Z **Source:** [Vikatan](https://www.vikatan.com/government-and-politics/discussion-about-power-center-politics?utm_source=X) --- 3 Min Read Published:Updated: விஜயுடன் ராம்குமார் பிரீமியம் ஸ்டோரி விஜயுடன் ராம்குமார் ஒவ்வொரு ஆட்சியும் அமையும்போதும், புதிது புதிதாக பவர் சென்டர்கள் உருவாவது வழக்கம்தான். கடந்த தி.மு.க ஆட்சியில், அப்போதைய முதல்வர் ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசனும், மகன் உதயநிதியும் அதிகார மையங்களாக இருந்தாலும், அவர்களைச் சுற்றி லண்டன் வெங்கட், பிரவீன் கணேஷ், ரத்தீஷ், அண்ணாநகர் கார்த்திக், ஸ்டாலினின் உதவியாளர் தினேஷ் எனப் பலர் பவர் சென்டர்களாக வலம்வந்தனர். இப்போதைய த.வெ.க ஆட்சியில், முதல்வரின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமியும், முதல்வரின் நண்பரான விஷ்ணு ரெட்டியும் அதிகார மையங்களாகக் கோலோச்சுகிறார்கள். அதேசமயம், புதிய பவர் சென்டர்களாக உருவாகியிருக்கும் ‘ரூட்’ ஜெகதீஷ் பழனிசாமியும், புரொட்யூஸர் ராம்குமாரும் தங்களுக்குள் மோதிக்கொள்வதுதான் பனையூரைச் சூடாக்கியிருக்கிறது. 4.7 / 5 Rating 3.5M+ Downloads Audio Magazines Instant News Summary Free 500+ Audio Books Low Data Usage விஜயுடன் ஜெகதீஷ் “சார் என்ன மூடுல இருக்காரு...” - செல்வாக்கு பெற்ற ஜெகதீஷ்! முதல்வர் விஜய்க்கு, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நகமும் சதையுமாக இருப்பவர்தான் ஜெகதீஷ் பழனிசாமி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அறிமுகத்தில் விஜய்யுடன் நெருக்கமானவர், விஜய்யின் நம்பிக்கைக்குரிய மேனேஜராகவும் மாறிப்போனார். இயக்குநர் அட்லீ, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்டோரின் மேனேஜராகவும் வலம்வந்தார். ‘ரூட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கியவர், `மாஸ்டர்’ திரைப்படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து தயாரிக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்தார். த.வெ.க ஆட்சியமைக்கும் முன்பாகவே, அந்தக் கட்சிக்குள் ஜெகதீஷின் கை ஓங்கிவிட்டது. விஜய்யின் அத்தனை அசைவுகளையும் அறிந்தவர் என்பதால், “சார் என்ன மூடுல இருக்காரு...” என்று த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் கேட்டுப் பெறும் அளவுக்கு செல்வாக்கை வளர்த்துக்கொண்டார் ஜெகதீஷ். அவருக்கு வணக்கம் வைப்பதற்கெனக் கட்சிக்குள் ஒரு கூட்டமும் உருவானது. சமீபத்தில், ஜெகதீஷின் புதுமனை புகுவிழாவுக்கு, பட்டு வேட்டி, சட்டையுடன் முதல்வர் சென்று வந்த பின்னர், ஜெகதீஷின் செல்வாக்கு அதிகாரிகளிடமும் உயர்ந்திருக்கிறது. அவரைப்போல, முதல்வருக்கு நெருக்கமானவராக அறியப்படும் மற்றொரு நபர் புரொட்யூஸர் ராம்குமார். முதல்வர் விஜய் நடித்த `லியோ’, `கோட்’ திரைப்படங்களின் செயல் தயாரிப்பாளரான ராம்குமார்தான், த.வெ.க ஆரம்பித்ததில் தொடங்கி இப்போது வரை விஜய்யின் பயணத் திட்டங்களை வகுத்துக் கொடுக்கிறார். தனக்குத் தேவையான அனைத்தையும் அச்சுப் பிசகாமல் செய்யும் காரியதரிசி என்பதால், ராம்குமாரை எப்போதும் உடன் வைத்திருக்கிறார் விஜய். முதல்வரான பின்னரும்கூட, விஜய்யுடன் ஜெகதீஷும் ராம்குமாரும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள். இப்போது, அவர்கள் இருவருக்கும் இடையே ‘ஈகோ’ மோதல் வெடித்திருப்பதுதான் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. விஜயுடன் ராம்குமார் “யார் அடுத்த தினேஷ்?” - வெடித்த பஞ்சாயத்து! அது குறித்து நம்மிடம் பேசிய த.வெ.க-வின் சீனியர்கள் சிலர், “முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆல் இன் ஆலாக இருந்தவர் தினேஷ். முந்தைய ஆட்சியில் நிழல் முதல்வர்போலவே வலம்வந்தார். அந்த இடத்தைப் பிடிப்பதற்குத்தான், ஜெகதீஷும் ராம்குமாரும் மோதிக்கொள்கிறார்கள். ராம்குமாரைவிட முதல்வருக்கு ஜெகதீஷ் நெருக்கமானவர் என்பதால், முதல்வரின் பர்சனல் செகரட்டரி பதவிக்கு ஜெகதீஷின் பெயர் ‘டிக்’ அடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதைத் தடுக்க ஒரு ஆட்டமே ஆடுகிறார் ராம்குமார். ஜெகதீஷிடம், ‘எத்தனை நாளுக்குத்தான் தலைவர் பின்னாலேயே இருக்கப்போகிறீர்கள்... உங்களுக்குப் பின்னால் வந்தவர்களெல்லாம் அமைச்சர்களாகி விட்டனர். நீங்களும் அமைச்சராக பவனி வர வேண்டாமா...’ என்று ராம்குமார் கொளுத்திப்போட, ஜெகதீஷுக்கு அரசியல் ஆசை துளிர்விட்டுவிட்டது. அதனால், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைத் தனக்குக் கேட்கிறார் ஜெகதீஷ். ஜெயித்துவிட்டால் அமைச்சராகிவிடலாம் என்பது கணக்கு. ஜெகதீஷ் அரசியலுக்குள் நுழைந்து விட்டால், முதல்வரின் பர்சனல் செகரட்டரி பதவி ராம்குமாரைத் தானாகத் தேடி வந்துவிடும். இந்த பவர் பாலிட்டிக்ஸ் முதல்வருக்கு இன்னும் புரியவில்லை. ஜெகதீஷ், ராம்குமார் அந்தத் தொகுதியில் லோக்கல் கட்சிக்காரருக்கு வாய்ப்பு கொடுப்பதுதான் சரியாக இருக்கும். அ.தி.மு.க-விலிருந்து வந்த கு.ப.கிருஷ்ணன், தன்னுடைய மகன் சிரஞ்சீவிக்கு திருச்சி கிழக்குத் தொகுதியைக் கேட்டிருக்கிறார். அதேபோல, சமீபத்தில் கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தொகுதியை எதிர்பார்க்கிறார். விஜய் நற்பணி மன்றத்திலிருந்து ஒரு டஜன் பேர் சீட் கேட்டிருக்கிறார்கள். அவர்களைப் புறந்தள்ளிவிட்டு, தன்னை வேட்பாளராக்க வேண்டுமென முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கிறார் ஜெகதீஷ். முதல்வரும் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்” என்றனர் விரிவாக. முதல்வரின் அறைக்குள் வி.ஐ.பி-க்கள் வந்தால் சந்திப்பதற்கு, ‘ஆன்டிக்’ ரூம் இருக்கிறது. அந்த அறைக்குள் அமர்வதற்கு ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டியைத் தவிர்த்து, ஜெகதீஷுக்கும் ராம்குமாருக்கும்தான் அனுமதியளித்திருக்கிறார் முதல்வர் விஜய். அந்த அளவுக்கு செல்வாக்கு படைத்த இருவருமே, அதிகாரப் போட்டிக்காக மோதிக்கொள்வது கட்சி வட்டாரத்தில் அனலைக் கூட்டியிருக்கிறது. இந்த யுத்தத்தில் யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பதைப் பார்க்க த.வெ.க பெருந்தலைகள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.